சுப்மன் கில், காம்பிர் மனதில் என்ன... * தொடரும் ஆடுகள சர்ச்சை
கோல்கட்டா: ஆடுகளம் தொடர்பாக கேப்டன் சுப்மன் கில், பயிற்சியாளர் காம்பிர் இடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணியால் 124 ரன்னை 'சேஸ்' செய்ய முடியவில்லை. இரண்டாவது இன்னிங்சில் 93 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது. இதற்கு ஆடுகளம் முக்கிய காரணம். இரு பேட்டர் போதுமாஅணித் தேர்வும் வியப்பாக இருந்தது. 'டாப் ஆர்டர் பேட்டர்' சாய் சுதர்சனை நீக்கினர். 'ஆல்-ரவுண்டர்களுக்கு' முக்கியத்துவம் அளித்தனர். கேப்டன் சுப்மன் கில் காயம் அடைய, ராகுல், ஜெய்ஸ்வால் என இரண்டு 'ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்' தான் இருந்தனர். நான்கு 'ஸ்பின்னர்', 2 'வேகம்' என 6 பவுலர்கள், ரிஷாப், துருவ் ஜுரல் என இரு கீப்பர்கள் இடம் பெற்றிருந்தனர். இரு பேட்டரை வைத்து வெல்வது கடினம். ஆடுகள விஷயத்திலும் பயிற்சியாளர் காம்பிர் கணிப்பு தவறானது. சுழலுக்கு சாதகமான ஆடுகளம் கேட்டார். தென் ஆப்ரிக்க 'ஸ்பின்னர்' ஹார்மர் 8 விக்கெட் சாய்த்து, இந்திய அணிக்கு 'ஷாக்' கொடுத்தார்.இரண்டுக்கும் சாதகம்சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பேசிய சுப்மன் கில்,''சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்டில் சுழலுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்க வேண்டும் என்பது பழைய கொள்கை. தற்போது பேட்டிங், பவுலிங் என இரண்டுக்கும் கைகொடுக்கும் ஆடுகளத்தில் விளையாடவே விரும்புகிறோம்,''என்றார். வறண்ட ஆடுகளம்ஆனால், ஈடன் கார்டன் மைதானத்தில் வந்திறங்கியதும் காம்பிரின் கவனம் ஆடுகளத்தின் மீது தான் இருந்தது. இவரது விருப்பப்படி சுழலுக்கு சாதகமான களம் அமைக்கப்பட்டது. இது கேப்டன், பயிற்சியாளர் இடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதை உணர்த்தியது. போட்டிக்கு முன் ஒரு வாரம் ஆடுகளத்தில் தண்ணீர் தெளிக்கப்படவில்லை. மாலை நேரத்தில் தார்ப்பாயால் மூடி வைத்தனர். இதனால் வறண்டு போன ஆடுகளத்தில், முதல் நாளில் இருந்தே வெடிப்பு ஏற்பட்டது. புழுதி பறந்தது. ஒரு முனையில் பந்துகள் 'பவுன்ஸ்' ஆகின. மறுமுனையில் சுழன்றன. பேட்டர்கள் கணித்து ஆட முடியவில்லை. விக்கெட்டுகள் விரைவாக சரிய, போட்டி மூன்று நாட்களுக்குள் முடிந்தது. சுப்மன் 'ரிட்டையர்ட் ஹர்ட்' ஆன நிலையில், எஞ்சிய 38 விக்கெட்டுகளில் 'வேகங்கள்' 16, 'ஸ்பின்னர்கள்' 22 விக்கெட் வீழ்த்தினர். தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமா மட்டுமே அரைசதம் அடித்தார். காத்திருக்கும் சவால்நியூசிலாந்துக்கு எதிரான கடந்த தொடரிலும் (2024) ஸ்பின்னர்ளுக்கு சாதகமான ஆடுகளம் தான் இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது. இதிலிருந்து காம்பிர் உள்ளிட்ட இந்திய அணி நிர்வாகத்தினர் பாடம் படிக்கவில்லை. ஈடனில் தோற்ற இந்தியா இனி தொடரை வெல்ல முடியாது. இரண்டாவது டெஸ்ட், நவ. 22ல் கவுகாத்தியில் துவங்குகிறது. அடுத்து இலங்கை (2 டெஸ்ட், 2026, ஆகஸ்ட்), நியூசிலாந்து ( 2 டெஸ்ட், 2026, அக்-நவ.) மண்ணில் சவாலான தொடர் காத்திருக்கிறது. மீண்டும் சொந்த மண்ணில் 2027ல் 'பார்டர்-கவாஸ்கர்' டிராபியில் (5 டெஸ்ட், ஜன.-பிப்.) தான் பங்கேற்க உள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.யாருக்கு வாய்ப்புகழுத்து பகுதி பிடிப்பால் அவதிப்படும் இந்திய கேப்டன் சுப்மன் கில், 2வது டெஸ்டில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. இவருக்கு பதில் சாய் சுதர்சன் அல்லது தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்படலாம்.