தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து: இலங்கை அணி மீண்டும் தோல்வி
மவுன்ட் மவுன்கனுய்: இரண்டாவது 'டி-20' போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி 45 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. மவுன்ட் மவுன்கனுயில் 2வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவிந்திரா (1) ஏமாற்றினார். டிம் ராபின்சன் (41), மார்க் சாப்மேன் (42) நம்பிக்கை அளித்தனர். பிலிப்ஸ் (23), டேரில் மிட்செல் (18) ஓரளவு கைகொடுத்தனர். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 186 ரன் எடுத்தது. மிட்செல் ஹே (41), பிரேஸ்வெல் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (37), குசால் பெரேரா (48), கேப்டன் சரித் அசலங்கா (20) ஆறுதல் தந்தனர். குசால் மெண்டிஸ் (10), கமிந்து மெண்டிஸ் (7) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். இலங்கை அணி 19.1 ஓவரில் 141 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி 4, கேப்டன் சான்ட்னர், ஹென்றி தலா 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை மிட்செல் ஹே வென்றார்.