தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்: தென் ஆப்ரிக்கா மீண்டும் தோல்வி
கேப்டவுன்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் 81 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, தொடரை 2-0 எனக் கைப்பற்றியது. சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றியது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது போட்டி கேப்டவுனில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க 'பீல்டிங்' தேர்வு செய்தது.பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் (25) நல்ல துவக்கம் கொடுத்தார். பாபர் ஆசம் (73), கேப்டன் முகமது ரிஸ்வான் (80) நம்பிக்கை தந்தனர். அபாரமாக ஆடிய கம்ரான் குலாம் 32 பந்தில், 63 ரன் (5 சிக்சர், 4 பவுண்டரி) விளாசினார். பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் 329 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு டோனி டி ஜோர்ஜி (34), வான் டெர் துசென் (23), மார்க்ரம் (21) ஆறுதல் தந்தனர். ஹெய்ன்ரிச் கிளாசன் (97) கைகொடுத்தார். மற்றவர்கள் ஏமாற்ற தென் ஆப்ரிக்க அணி 43.1 ஓவரில் 248 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் ஷாகீன் ஷா அப்ரிதி 4, நசீம் ஷா 3, அப்ரார் அகமது 2 விக்கெட் சாய்த்தனர்.