உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சுப்மன் கில் ‘நம்பர்–1’: ஐ.சி.சி., தரவரிசையில்

சுப்மன் கில் ‘நம்பர்–1’: ஐ.சி.சி., தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார். ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்திய கேப்டன் சுப்மன் கில், 841 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். சமீபத்தில் கவுகாத்தியில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது போட்டியில் இரட்டை சதம் (223*) விளாசினார் கில். மூன்றாவது போட்டியில் சதம் விளாசிய கே.எல். ராகுல் (653 புள்ளி), 17வது இடத்தில் இருந்து 10வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் விராத் கோலி (781 புள்ளி) 2வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா (770) 4வது இடத்தில் நீடிக்கிறார்.

ஷ்ரேயஸ் ‘நம்பர்–7’

சர்வதேச ‘டி–20’ போட்டி பேட்டர் தரவரிசையில் இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 786 புள்ளிகளுடன் 25வது இடத்தில் இருந்து ‘நம்பர்–7’ இடத்தை கைப்பற்றினார். இவர், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ‘டி–20’ போட்டியில் 43 பந்தில் 102* ரன் (6X6, 10X4) விளாசினார். மற்ற இந்திய வீரர்களான இஷான் கிஷான் (902), அபிஷேக் சர்மா (887) முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர். மற்றொரு இந்திய வீரர் திலக் வர்மா (719), 9வது இடத்தில் இருந்து 10வது இடத்துக்கு தள்ளப்பட்டார். எட்டு இடம் முன்னேறிய இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி (542), 46வது இடத்தை இலங்கையின் குசால் பெரேராவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை