முதல் கோப்பை வெல்லுமா டில்லி * மும்பையுடன் இன்று பலப்பரீட்சை
மும்பை: டபிள்யு.பி.எல்., பைனலில் இன்று மும்பை, டில்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இந்தியாவில் பெண்களுக்கான பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) 'டி-20' தொடர் நடத்தப்படுகிறது. மூன்றாவது சீசனில் மும்பை, டில்லி, குஜராத், பெங்களூரு, உ.பி., என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி, லீக் சுற்றுடன் நடையை கட்டியது. இன்று மும்பையில் நடக்கும் பைனலில் டில்லி, மும்பை அணிகள் மோதுகின்றன.டில்லி அணி லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. முதல் இரண்டு முறை, மும்பை (2023), பெங்களூருவிடம் (2024) கோப்பை இழந்தது. இதனால் மெக் லானிங் தலைமையிலான டில்லி அணி, இன்று சாதித்தாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.பெண்கள் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனான மெக் லானிங், முதல் இரு முறை நழுவவிட்ட கோப்பையை இன்று வென்று தந்தால் நல்லது. ஏனெனில் 2008 ஐ.பி.எல்., முதல் இன்று வரை ஆண்கள், பெண்கள் அணிகள் ஒரு கோப்பை கூட வெல்லவில்லை.தவிர, லீக் சுற்றில் இரு முறையும் மும்பையை வீழ்த்தியது, இன்று நம்பிக்கையுடன் செயல்பட உதவும். இதற்கு, அதிக ரன் எடுத்த ஷபாலி (300), மெக் லானிங் (263), ஜெமிமா (116) உத வேண்டும்.'எலிமினேட்டர்' போட்டியில் குஜராத்தை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது ஹர்மன்பிரீத் கவுரின் (236 ரன்) மும்பை அணி. இத்தொடரின் சிறந்த ஆல் ரவுண்டர்கள் நாட் சிவர் (493 ரன், 9 விக்.,), மாத்யூஸ் (304 ரன், 17 விக்.,) மும்பைக்கு பெரும் பலமாக உள்ளனர். தவிர பவுலிங்கில் அமேலியா கெர் (16 விக்.,) மீண்டும் மிரட்டினால், இரண்டாவது கோப்பை வெல்லலாம்.