உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இளம் இந்தியா இமாலய வெற்றி: ஆசிய கோப்பையில் அபாரம்

இளம் இந்தியா இமாலய வெற்றி: ஆசிய கோப்பையில் அபாரம்

சார்ஜா: ஆசிய கோப்பை (19 வயது) லீக் போட்டியில் அசத்திய இந்திய அணி 211 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 11வது சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஜப்பான் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ஆயுஷ் மத்ரே (54) நல்ல துவக்கம் கொடுத்தார். வைபவ் சூர்யவன்ஷி (23), ஆன்ட்ரி சித்தார்த் (35) நிலைக்கவில்லை. கார்த்திகேயா (57), தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். கேப்டன் முகமது அமான் சதம் விளாசினார்.இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 339 ரன் குவித்தது. முகமது அமான் (122* ரன், 118 பந்து, 7 பவுண்டரி), ஹர்திக் ராஜ் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.கடின இலக்கை விரட்டிய ஜப்பான் அணிக்கு ஹுகோ கெல்லி (50) நல்ல துவக்கம் தந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ஜப்பான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 128 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சார்லஸ் ஹின்ஸ் (35) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் சேட்டன் சர்மா, ஹர்திக் ராஜ், கார்த்திகேயா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.கட்டாய வெற்றிஇதுவரை விளையாடிய 2 போட்டியில், ஒரு வெற்றி, ஒரு தோல்வி என 2 புள்ளிகளுடன் ('ரன்-ரேட்' 1.680) இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. முதலிரண்டு இடங்களில் பாகிஸ்தான் (4 புள்ளி), யு.ஏ.இ., (2 புள்ளி, 'ரன்-ரேட்' 2.040) அணிகள் உள்ளன. நாளை நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் இந்தியா, யு.ஏ.இ., அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி