| ADDED : ஜூன் 25, 2024 10:27 PM
இங்கிள்உட்: கோஸ்டாரிகாவுக்கு எதிரான கோபா கால்பந்து லீக் போட்டியில் பிரேசில் அணி, கோல் எதுவும் அடிக்காமல் 'டிரா' செய்தது. அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. இதன் 'டி' பிரிவு லீக் போட்டியில் உலகத் தரவரிசையில் 4வது இடத்திலுள்ள பிரேசில் அணி, 52வது இடத்திலுள்ள கோஸ்டாரிகாவை எதிர்கொண்டது. சமீபத்திய போட்டிகளில் தடுமாறிய போதும், பிரேசில் எளிதாக வெல்லும் என நம்பப்பட்டது.மாறாக கோஸ்டாரிகா அணியினர் கடும் சவால் கொடுத்தனர். போட்டியின் 30 வது நிமிடத்தில் பிரேசில் வீரர் மார்குயினாஸ் ஒரு கோல் அடித்தார். 'ரீப்ளேயில்' இது 'ஆப்சைடு' எனத் தெரியவர, கோல் திரும்பப் பெறப்பட்டது. முதல் பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் இரு தரப்பிலும் முரட்டு ஆட்டத்தில் இறங்கினர். 60 வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியரிடம் இருந்து பந்தை வாங்கிய ரோட்ரிகோ, இடது காலால் கோல் அடிக்க முயற்சித்தார். இதை கோஸ்டாரிகா கோல் கீப்பர் பாட்ரிக், அசத்தலாக தடுத்தார். 79 வது நிமிடம் அரானா அடித்த கோல் வாய்ப்பும் தடுக்கப்பட்டது. பெரும்பாலும் பந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர் பிரேசில் வீரர்கள். 19 முறை கோல் அடிக்க முயற்சித்த போதும், 3 வாய்ப்புகள் தான் துல்லியமாக இருந்தது. முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி (0-0) 'டிரா' ஆனது. கொலம்பியா அபாரம்'டி' பிரிவில் நேற்று நடந்த மற்றொரு போட்டியில் கொலம்பியா, பராகுவே அணிகள் மோதின. முன்னணி வீரர் ரோட்ரிக்ஸ், சக வீரர்கள் முனோஸ் (32 வது நிமிடம்), லெர்மா (42 வது) கோல் அடிக்க கைகொடுத்தார். பராகுவே சார்பில் என்சிசோ (69 வது நிமிடம்) மட்டும் ஒரு கோல் அடித்தார். முடிவில் கொலம்பிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.