லெய்ப்ஜிக்: யூரோ கோப்பை கால்பந்து 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறியது இத்தாலி. நேற்று நடந்த போட்டியில் குரோஷியாவுடன் 1-1 என 'டிரா' செய்தது. ஜெர்மனியில் 'யூரோ' கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. லெய்ப்ஜிக்கில் நடந்த ஸ்டர்கர்ட்டில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் உலகத் தரவரிசையில் அடுத்தடுத்த இடத்தில் உள்ள குரோஷியா ('நம்பர்-9'), இத்தாலி ('நம்பர்-10') அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.இரண்டாவது பாதியில் போட்டியின் 54 வது நிமிடத்தில் குரோஷிய அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. எளிதான இந்த வாய்ப்பை வீணடித்தார் குரோஷிய கேப்டன் லுகா மாட்ரிச். இருப்பினும் அடுத்த நிமிடம் இடது காலால் ஒரு கோல் அடித்து அணிக்கு உதவ, குரோஷியா 1-0 என முன்னிலை பெற்றது. இதன் பின் போட்டியை தாமதப்படுத்த முயன்ற குரோஷியாவின் இவாசெக், முரட்டு ஆட்டத்திற்காக மாட்ரிச், பொன்கிராசிக் என பலருக்கும் அடுத்தடுத்து 'எல்லோ கார்டு' கிடைத்தது. இத்தாலி அணி சார்பில் பதில் கோல் அடிக்க எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில், 90+8வது நிமிடத்தில் இத்தாலி வீரர் கலாபியோரி பந்தை சக வீரர் ஜக்காக்னிக்கு 'பாஸ்' செய்தார். இதை பெற்ற ஜக்காக்னி, அப்படியே வலைக்குள் தள்ள, கோலாக மாறியது. இத்தாலி அணிக்காக இவர் அடித்த முதல் கோல் இது. முடிவில் போட்டி 1-1 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. 'பி' பிரிவில் 3 போட்டியில் தலா ஒரு வெற்றி, 'டிரா', தோல்வியுடன் 4 புள்ளி பெற்ற நடப்பு சாம்பியன் இத்தாலி அணி, இரண்டாவது இடம் பிடித்து 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறியது. குரோஷிய அணி (3 போட்டி, 2 புள்ளி) வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. 'சீனியர்' வீரர்யூரோ கால்பந்தில் கோல் அடித்த மூத்த வீரர் ஆனார் குரோஷியாவின் மாட்ரிச் (38 வயது, 289 நாள்). இதற்கு முன் ஆஸ்திரியாவின் இவிகா வாஸ்ரிச் (38 வயது, 257 நாள், 2008ல்) முதலிடத்தில் இருந்தார். ஸ்பெயின் கலக்கல்நேற்று நடந்த மற்றொரு 'பி' பிரிவு போட்டியில் ஸ்பெயின், அல்பேனியா அணிகள் மோதின. இதில் டோரஸ் (13 வது நிமிடம்) கோல் கைகொடுக்க, ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பங்கேற்ற 3 போட்டியிலும் வென்ற ஸ்பெயின் அணி, 9 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, 'நாக் அவுட்' சுற்றுக்குள் நுழைந்தது. உலக கோப்பை, யூரோ வரலாற்றில் லீக் சுற்றில் எதிரணிக்கு எவ்வித கோலும், ஸ்பெயின் அணி விட்டுக்கொடுக்காதது இது தான் முதன் முறை. தவிர 2008க்குப் பின் லீக் சுற்றில் 3 போட்டியிலும் வென்றது ஸ்பெயின். பிரான்ஸ் 'டிரா'பெர்லினில் நடந்த 'டி' பிரிவு போட்டியில் நெதர்லாந்து அணி 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவிடம் தோல்வியடைந்தது. இதே பிரிவில் பிரான்ஸ், போலந்து அணிகள் மோதின. எம்பாப்வே (பிரான்ஸ்) கோல் கைகொடுக்க, போட்டி 1-1 என 'டிரா' ஆனது. இதையடுத்து 'டி' பிரிவில் 'டாப்-2' இடம் பெற்ற ஆஸ்திரியா (6), பிரான்ஸ் (5) அணிகள் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தன. நெதர்லாந்து (4) அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்தது, போலந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக (2020, 2024) லீக் சுற்றுடன் வெளியேறியது.