மீண்டும் இந்தியா வருவேன் * மெஸ்ஸி நெகிழ்ச்சி
புதுடில்லி: ''இந்திய மக்களின் அன்பை, நாங்கள் எடுத்துக் செல்கிறோம். மீண்டும் கட்டாயம் இந்தியா வருவேன்,'' என்றார் மெஸ்ஸி.அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் 'பிபா' உலக கோப்பை வென்றது. 'கோட் இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். முதல் நாளில், கோல்கட்டாவில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பின் ஐதராபாத் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. இரண்டாவது நாள் மும்பை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் (கிரிக்கெட்), சுனில் செத்ரி (கால்பந்து) மெஸ்ஸியை சந்தித்தனர். டில்லியில் உற்சாகம்நேற்று மூன்றாவது, கடைசி நாளில் காலை 10:45 மணிக்கு டில்லி வர இருந்தார் மெஸ்ஸி. ஆனால் பனிமூட்டம் காரணமாக தாமதமாக, மதியம் 2:30 மணிக்கு தான் டில்லி விமான நிலையம் வந்தார். இவருடன் உருகுவேயின் லுாயிஸ் சாரஸ், அர்ஜென்டினா அணி மத்தியகள வீரர் ரோட்ரிகோ டி பால் வந்தனர். அங்கிருந்து டில்லி, லீலா பேலஸ் ஓட்டலுக்கு சென்ற மெஸ்ஸி, முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அடுத்து டில்லி அருண் ஜெட்லி மைதானத்திற்கு கிளம்பினர். இங்கு, 25,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். மெஸ்ஸி வருகைக்கு முன்னதாக, மெஸ்ஸி ஆல் ஸ்டார், மினர்வா ஆல் ஸ்டார் அணியினர் பங்கேற்ற கண்காட்சி போட்டி நடந்தது. இந்திய வீராங்கனை மணிஷா, ஆல் ஸ்டார் அணிக்காக விளையாடினார். இதில் மினர்வா அணி 5-0 என வெற்றி பெற்றது. மைதானத்தை வலம் வந்து ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். கால்பந்துகளை ரசிகர்களை நோக்கி உதைத்து, பரிசாக வழங்கினார். ரசிகர்கள் 'மெஸ்ஸி... மெஸ்ஸி' என உற்சாக குரல் எழுப்பினர்.மினர்வா அகாடமி கால்பந்து அணி வீரர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். பஞ்சாப் ஜூனியர் அணி வீரர்களுடன் கால்பந்து விளையாடினார்.பூட்டியா சந்திப்புஇந்திய அணி முன்னாள் கோல் கீப்பர் அதிதி சவுகான், மெஸ்ஸியை சந்தித்தார். தனது பெயர் பொறித்த ஜெர்சியில், மூவரிடமும் 'ஆட்டோகிராப்' வாங்கி மகிழ்ந்தார் அதிதி. டில்லி முதல்வர் ரேகா குப்தா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா, மைதானத்திற்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்திய கால்பந்து ஜாம்பவான் பாய்ச்சங் பூட்டியா, மெஸ்ஸியை சந்தித்தார். மெஸ்ஸி கூறுகையில்,'' இந்திய பயணம் எங்களுக்கு நல்ல அனுபவமாக இருந்தது. இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது வித்தியாசமாக இருந்தது. உங்களிடம் இருந்து கிடைத்த அன்பை, நாங்கள் எடுத்துச் செல்கிறோம். கட்டாயம் மீண்டும் இந்தியா வருவேன். இங்கு எப்படியும் ஒருநாள் கால்பந்து போட்டியில் பங்கேற்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி,'' என்றார்.30 நிமிட ரசிகர்கள் சந்திப்பிற்குப் பின் மெஸ்ஸி, கிளம்பிச் சென்றார். பிரதமர் சந்திப்பு ரத்துநேற்று காலை 10.45 மணிக்கு டில்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க இருந்தார் மெஸ்ஸி. ஆனால் காலை 8:30 மணிக்கு, மூன்று நாடுகள் பயணத்தின் ஒரு பகுதியாக, ஜோர்டான் கிளம்பிச் சென்றார் மோடி. இதனால் மோடி-மெஸ்ஸி சந்திப்பு நடக்கவில்லை. இதற்குப் பதில் இந்தியாவுக்கான அர்ஜென்டினா துாதர் மரியானோ அகஸ்டின் கவுசினோ, இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், ராணுவ தளபதி உபேந்திர திவேதி உள்ளிட்டோரை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் இதுவும் நடக்கவில்லை. டிக்கெட் பரிசுஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை தொடரில், 2026, பிப். 7ல் இந்தியா, அமெரிக்க அணிகள் மோதும் லீக் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட்டை, ஜெய்ஷா, மெஸ்ஸிக்கு வழங்கினார். அடுத்து இந்திய வீரர்கள் கையெழுத்திட்ட பேட் பரிசாக வழங்கினார்.பின் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அணியும் நீல நிற ஜெர்சிகளை வழங்கினார். இதில் மெஸ்சி (எண் 10), சாரஸ் (9), ரோட்ரிகோ (7) என பெயர், எண் பொறிக்கப்பட்டு இருந்தன.குஜராத்தில்...தனது மூன்றுநாள் பயணத்தை நிறைவு செய்த மெஸ்ஸி நேற்று டில்லியில் இருந்து கிளம்பிச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, குஜராத், ஜாம்நகரில் உள்ள வந்தாரா உயிரியல் பூங்காவுக்கு மெஸ்ஸி செல்கிறார். இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், இன்று அதிகாலை அல்லது காலையில் இந்தியாவில் இருந்து கிளம்புவார் என செய்தி வெளியாகின.பலத்த பாதுகாப்புகோல்கட்டாவில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால், டில்லியில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாகன நிறுத்தங்களில் அடையாள அட்டை வழங்கப்பட்டன. அருண் ஜெட்லி மைதானத்தை சுற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.