அவினாஷ் சேபிள் ஏமாற்றம்: டைமண்ட் லீக் தடகளத்தில்
சிலேசியா: டைமண்ட் லீக் தடகளத்தின் 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் 14வது இடம் பிடித்து ஏமாற்றினார்.போலந்தில், டைமண்ட் லீக் தடகளம் நடந்தது. ஆண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தின் பைனலில், இந்தியாவின் அவினாஷ் சேபிள் 29, பங்கேற்றார். மொத்தம் 17 பேர் பங்கேற்ற இப்போட்டியில், பந்தய துாரத்தை 8 நிமிடம், 29.96 வினாடியில் கடந்த இவர், 14வது இடம் பிடித்தார்.ஆசிய விளையாட்டில் (2022) தங்கம் வென்ற அவினாஷ், பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியில் 6வது இடத்தை (8 நிமிடம், 09.91 வினாடி) கைப்பற்றினார். சமீபத்தில் முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் பைனல் வரை சென்ற அவினாஷ், 11வது இடம் பிடித்திருந்தார்.நடப்பு ஒலிம்பிக், உலக சாம்பியன் மொராக்கோவின் எல் பக்காலி சோபியேன் (8 நிமிடம், 04.29 வினாடி) முதலிடத்தை தட்டிச் சென்றார். அடுத்த இரு இடங்களை கென்யாவின் அமோஸ் செரேம் (8 நிமிடம், 04.29 வினாடி), எத்தியோப்பியாவின் சாமுவேல் பயர்வு (8 நிமிடம், 04.34 வினாடி) கைப்பற்றினர்.