பைனலில் ஹரியானா-பாட்னா: புரோ கபடியில் மோதல்
புனே: புரோ கபடி லீக் தொடரின் பைனலுக்கு ஹரியானா அணி முன்னேறியது. அரையிறுதியில் 28-25 என உ.பி., அணியை வீழ்த்தியது.இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. புனேயில் நடந்த முதல் அரையிறுதியில் ஹரியானா, உ.பி., அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் ஹரியானா அணி 12-11 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் உ.பி., வீரர்களை 'ஆல்-அவுட்' செய்த ஹரியானா அணி 16 புள்ளி பெற்றது. உ.பி., அணிக்கு 14 புள்ளி மட்டும் கிடைத்தது.ஆட்டநேர முடிவில் ஹரியானா அணி 28-25 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2023, 2024) பைனலுக்குள் நுழைந்தது. கடந்த ஆண்டு நடந்த பைனலில் ஹரியானா அணி, புனேயிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.ஹரியானா அணிக்கு ஷிவம் (7 புள்ளி), வினய் (6), ராகுல் (5) கைகொடுத்தனர். உ.பி., அணி சார்பில் ககன் கவுடா 10, பவானி ராஜ்புட், ஹிதேஷ் தலா 5 புள்ளி பெற்றனர். பலே பாட்னா: மற்றொரு அரையிறுதியில் டில்லி, பாட்னா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பாட்னா அணி 32-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 5வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. இதற்கு முன் விளையாடிய 4 பைனலில், வரிசையாக 3 முறை (2016, 2016, 2017) கோப்பை வென்ற பாட்னா, ஒரு முறை (2021-22) 2வது இடம் பிடித்தது.புனேயில் நடக்கவுள்ள பைனலில் (டிச. 29) பாட்னா, ஹரியானா அணிகள் மோதுகின்றன.