ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா
சென்னை: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி காலிறுதியில் இன்று இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இதில் அசத்தினால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறலாம்.சென்னை, மதுரையில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த 6 அணிகளுடன், 2வது இடம் பிடித்த 'டாப்-2' அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.இன்று சென்னையில் நடக்கும் காலிறுதியில் ஸ்பெயின்-நியூசிலாந்து, பிரான்ஸ்-ஜெர்மனி, நெதர்லாந்து-அர்ஜென்டினா, இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் சிலி (7-0), ஓமன் (17-0), சுவிட்சர்லாந்து (5-0) அணிகளை வீழ்த்திய இந்தியா, 100 சதவீத வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.இந்தியா சார்பில் 29 கோல் (18 'பீல்டு', 9 'பெனால்டி கார்னர்', 2 'பெனால்டி ஸ்டிரோக்') பதிவானது. இந்திய கோல்கீப்பர்களான பிரின்ஸ் தீப் சிங், பிக்ரம்ஜித் சிங், எதிரணிக்கு ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்கவில்லை. இருப்பினும் இந்திய வீரர்கள் 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை வீணடிக்க கூடாது.லீக் சுற்றில் கோல் அடித்த இந்தியாவின் தில்ராஜ் சிங் (5 கோல்), மன்மீத் சிங் (5), அர்ஷ்தீப் சிங் (4), அஜீத் யாதவ் (3), ஷர்தானந்த் திவாரி (3), அன்மோல் எக்கா (2), ரோசன் குஜுர் (2), லுவாங் (2), குர்ஜோத் சிங் (2) மீண்டும் கைகொடுக்கலாம்.லீக் சுற்றில் நமீபியா, எகிப்தை வீழ்த்திய பெல்ஜியம், ஸ்பெயினிடம் மட்டும் தோல்வியடைந்தது. இன்று இந்தியாவுக்கு சவால் கொடுக்க முயற்சிக்கும். வங்கதேசம் கோல் மழைமதுரை, ரேஸ்கோர்ஸ் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் 17-24வது இடங்களுக்கான போட்டிகள் நடந்தன. இதில் வங்கதேச அணி 13-0 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தியது. தென் கொரிய அணி 6-3 என எகிப்தை வென்றது. நமீபியா, ஆஸ்திரியா அணிகள் மோதிய போட்டி 2-2 என 'டிரா' ஆனது. பின், 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் ஆஸ்திரியா 2-0 என வெற்றி பெற்றது. சீன அணி 3-2 என கனடாவை வீழ்த்தியது.தென் ஆப்ரிக்கா அபாரம்சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 9-16வது இடங்களுக்கான போட்டிகள் நடந்தன. இதில் தென் ஆப்ரிக்க அணி 3-1 என மலேசியாவை வீழ்த்தியது. இங்கிலாந்து அணி 3-1 என, சிலியை வென்றது.ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது. அயர்லாந்து அணி 5-2 என, சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது.