உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹாக்கி: காலிறுதியில் இந்திய அணி * ஜூனியர் உலக கோப்பையில் அபாரம்

ஹாக்கி: காலிறுதியில் இந்திய அணி * ஜூனியர் உலக கோப்பையில் அபாரம்

மதுரை: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி காலிறுதிக்கு இந்தியா முன்னேறியது. நேற்று தனது கடைசி லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி, 14வது சீசன் சென்னை, மதுரையில் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் இரு போட்டிகளில் சிலி (7-0), ஓமனை (17-0) வென்றது. நேற்று மதுரையில் நடந்த தனது கடைசி லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொண்டது. போட்டி துவங்கிய முதல் நிமிடத்தில் இந்திய வீரர் மன்மீட் சிங், 'பீல்டு' கோல் அடித்தார். தொடர்ந்து 10 வது நிமிடம் மற்றொரு கோல் அடித்தார் மன்மீட். 12, 28 வது நிமிடம் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை ஷர்தாநந்த் திவாரி, அர்ஷ்தீப் சிங் கோலாக மாற்றினர். முதல் பாதியில் இந்தியா 4-0 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில், சுவிட்சர்லாந்துக்கு (45 வது நிமிடம்) 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பு கிடைத்தது. இதை இந்திய கோல் கீப்பர் பிரின்ஸ் அசத்தலாக தடுத்தார். 53வது நிமிடம் கிடைத்த 'பெனால்டி கார்னரில்' ஷர்தாநந்த், மீண்டும் கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'பி' பிரிவில் 9 புள்ளியுடன் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் அபாரம்'டி' பிரிவில் நடந்த போட்டியில் ஸ்பெயின் அணி, நமீபியாவை எதிர்கொண்டது. ஸ்பெயின் அணிக்கு அவிலா (5, 23, 47, 58) நான்கு கோல் அடித்து அசத்தினார். மெடினா (7, 27), மார்டின் (44, 59) தலா 2 கோல் அடித்தனர். முடிவில் ஸ்பெயின் அணி 13-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. * மதுரையில் நடந்த மற்றொரு போட்டியில் பெல்ஜியம் அணி, 10-0 என எகிப்தை வீழ்த்தியது. பெல்ஜியம் வீரர் லான்கெர் (18, 25, 39) அதிகபட்சம் மூன்று கோல் அடித்தார். * நெதர்லாந்து அணி 11-0 என ஆஸ்திரியாவை வென்றது. மலேசிய அணி 1-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது. 8 அணிகள் தகுதிலீக் சுற்று போட்டிகள் நேற்று முடிந்தன. 6 பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. 2வது இடம் பெற்ற சிறந்த 2 அணிகளான நியூசிலாந்து, பெல்ஜியம் அணிகளும் சேர்த்து மொத்தம் 8 அணிகள் காலிறுதிக்குள் நுழைந்தன.தீராத ஆஸ்திரேலியா ஏக்கம்சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்த 'எப்' பிரிவு போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்தது. மற்றொரு போட்டியில் வங்கதேச அணி 2-3 என, பிரான்சிடம் தோல்வியடைந்தது. 'எப்' பிரிவில் பிரான்ஸ் அணி (9 புள்ளி) காலிறுதிக்கு முன்னேறியது. இரண்டாவது இடம் பிடித்த ஆஸ்திரேலியா (6), மீண்டும் காலிறுதி வாய்ப்பை இழந்தது. 9 முதல் 16 வரையிலான இடத்துக்கான போட்டிகளில் பங்கேற்க உள்ளது. * ஹாக்கி அரங்கில் வலிமையான அணி ஆஸ்திரேலியா. கடைசியாக 1997ல் ஜூனியர் உலக கோப்பை வென்றது. இதன் பின் கடந்த 28 ஆண்டுகளாக ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. * 'பி' பிரிவு போட்டியில் சிலி, ஓமன் அணிகள் மோதின. இதில் சிலி அணி 2-0 என வெற்றி பெற்றது. சிலி அணிக்கு துய்ஸ்பெர்க் (10 வது நிமிடம்), டபோர்கா (47) தலா ஒரு கோல் அடித்து உதவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை