சத்யன், ஸ்வஸ்திகா சாம்பியன்: தேசிய டேபிள் டென்னிசில்
சண்டிகர்: தேசிய டேபிள் டென்னிசில் சத்யன், ஸ்வஸ்திகா சாம்பியன் பட்டம் வென்றனர்.பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 51வது சீசன் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய (பி.எஸ்.பி.பி.,) அணியின் சத்யன் ஞானசேகரன், மானவ் தக்கர் மோதினர். அபாரமாக ஆடிய சத்யன் 4-3 (6-11, 14-12, 11-6, 9-11, 12-10, 11-13, 12-10) என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். நான்காவது முறையாக (2014, 2016, 2017, 2024) தேசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சத்யனுக்கு, ரூ. 1.12 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மானவ் தக்கர், வெள்ளிப் பதக்கத்துடன் ரூ. 46 ஆயிரம் பரிசு வென்றார்.பெண்கள் ஒற்றையர் பைனலில், இந்திய விமான நிலைய ஆணைய (ஏ.ஏ.ஐ.,) அணியின் ஸ்வஸ்திகா கோஷ், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.,) அணியின் ஸ்ரீஜா அகுலா மோதினர். இதில் ஸ்வஸ்திகா 4-2 (8-11, 11-8, 11-6, 10-12, 11-9, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக தேசிய சாம்பியன் பட்டம் வென்றார். இவருக்கு, ரூ. 1.12 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆண்கள் பிரிவில் ரயில்வேஸ் அணியும், பெண்கள் பிரிவில் பெட்ரோலியம் அணியும் கைப்பற்றின.