இந்தியாவுக்கு நான்கு பதக்கம் * உலக துப்பாக்கிசுடுதலில்...
கெய்ரோ: எகிப்தின் கெய்ரோவில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் (ரைபிள்/பிஸ்டல்/ஷாட் கன்) நடக்கிறது. ஆண்களுக்கான 50 மீ., ரைபிள் புரோன் பிரிவு போட்டி நடந்தது. இந்தியாவின் ரோகித் கன்யன், மொத்தம் 615.8 புள்ளி பெற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். கஜகஸ்தானின் ஓலக் (616.3) தங்கம், பெலாரசின் ஆர்செனி (615.3) வெண்கலம் வென்றனர். இந்தியாவின் ஷிவேந்திர பகதுார் (613.6) 4வது, ஹேமந்த் பர்மன் (613.2) 6வது இடம் பிடித்தனர். ஆண்களுக்கான 25 மீ., பிஸ்டல் பிரிவில் போட்டி நடந்தது. இந்திய வீரர்கள் ராஜ் சந்திரா (580), அபினவ் தேஜ்வல் (578) வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றனர். கஜகஸ்தானின் கிரில் சுகனோவ் (581), தங்கம் கைப்பற்றினார். மற்ற இந்திய வீரர்கள் பிரதாப் சிங் (575), சாஹில் சவுத்ரி (574), அபினவ் சவுத்ரி (574) 4, 5, 6வது இடம் பிடித்தனர்.பெண்களுக்கான 25 மீ., பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சேஜல் காம்ளே, 27 புள்ளியுடன் வெள்ளி வென்றார். பெலாரசின் இவானோவா (31) தங்கம் கைப்பற்றினார். இந்தியா இதுவரை 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கம் வென்று, பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. பெலாரஸ் (2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம்), கஜகஸ்தான் (2 தங்கம்) முதல் இரு இடத்தில் உள்ளன.