இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி * உலக துப்பாக்கி சுடுதலில்
கெய்ரோ: உலக துப்பாக்கி சுடுதலில் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு நேற்று 2 வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. எகிப்தின் கெய்ரோவில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 'ரைபிள் 3' பொசிசன்ஸ் பிரிவில் தகுதிச்சுற்று நடந்தது. இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங், 'நீலிங்' (200), 'புரோன்' (200) பிரிவில் முழு புள்ளி பெற்றார். அடுத்து 'ஸ்டாண்டிங்' பிரிவில் (197) அசத்திய இவர், மொத்தம் 597 புள்ளி பெற்று, முதலிடம் பெற்றார். உலக சாதனையை சமன் செய்தார். மற்றொரு இந்திய வீரர் நீரஜ் குமார் (592) 5வது இடம் பெற, இருவரும் பைனலுக்கு முன்னேறினர்.அடுத்து நடந்த பைனலில் ஐஸ்வரி பிரதாப் சிங் (466.9) 0.2 புள்ளி வித்தியாசத்தில் தங்கப்பதக்கத்தை நழுவவிட்டார். சீனாவின் யுகுன் லியு (467.1) தங்கம் வென்றார். நீரஜ் (432.6) 5வது இடம் பிடித்தார்.மீண்டும் 'வெள்ளி'10 மீ., 'ஏர் பிஸ்டல்' கலப்பு அணிகளுக்கான தகுதிச் சுற்றில் இந்தியாவின் சாம்ராட் ராணா, ஈஷா சீங் ஜோடி பங்கேற்றது. இதில் 586 புள்ளி எடுத்து பைனலுக்கு முன்னேறியது. இந்தியாவின் சுருச்சி, ஷர்வன் ஜோடி (579) 8வது இடம் பெற்று வெளியேறியது. அடுத்து நடந்த பைனலில் இந்திய ஜோடி 10-16 என சீனாவின் குயான்ஜன், ஹு கய்யிடம் தோற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது. இதுவரை இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என, 11 பதக்கத்துடன் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (9 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம்) நீடிக்கிறது.