சபாஷ் சபலென்கா: யு.எஸ்., ஓபனில் சாம்பியன்
நியூயார்க்: யு.எஸ்., ஓபனில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் பெலாரசின் சபலென்கா (உலகின் 'நம்பர்-2'), அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா (6வது இடம்) மோதினர். முதல் செட்டை 7-5 என போராடி வென்ற சபலென்கா, இரண்டாவது செட்டையும் 7-5 என கைப்பற்றினார். ஒரு மணி நேரம், 53 நிமிடம் நீடித்த போட்டியில் சபலென்கா 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று, யு.எஸ்., ஓபனில் முதன்முறையாக கோப்பை வென்றார். தனது 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். ஏற்கனவே இரண்டு முறை (2023, 2024) ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்றிருந்தார்.சபலென்காவுக்கு கோப்பையுடன், ரூ. 30 கோடி பரிசு வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த பெகுலாவுக்கு ரூ. 15 கோடி பரிசாக கிடைத்தது.சபலென்கா கூறுகையில், '' பைனல் மிகவும் சவாலாக இருந்தது. பல்வேறு சோதனைகளை கடந்து முதன்முறையாக கோப்பை வென்றதில் மகிழ்ச்சி,'' என்றார்.