செங்கை - புக்கத்துறை இடையே டவுன் பஸ் இயக்க கோரிக்கை
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர், பழமத்துார், புக்கத்துறை, வடபாதி உள்ளிட்ட, 20க்கும் மேற்ப்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பள்ளி, கல்லுாரி, அத்தியாவசிய பணி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, செங்கல்பட்டுக்கு வந்து செல்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள், புக்கத்துறை கூட்டுச் சாலையில் இருந்து, செங்கல்பட்டு - மதுராந்தகம் தடத்தில் டவுன் பஸ்களில் பயணம் செய்கின்றனர். இந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. அதன்பின், நீண்டநேரம் காத்திருந்து, தனியார் பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதனை தவிர்க்க, பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்வோர் நலன்கருதி, செங்கல்பட்டு - புக்கத்துறை வரை டவுன் பஸ் இயக்க வேண்டும். இது தொடர்பாக, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டலம் மற்றும் போக்குரவத்து துறை அமைச்சர், கலெக்டர் ஆகியோருக்கு, பொதுமக்கள் மனு அனுப்பி உள்ளனர்.இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நலன் கருதி, டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.