உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நீர்வழித்தடங்களில் அடைப்புகள் வரும் 15க்குள் அகற்ற இலக்கு

நீர்வழித்தடங்களில் அடைப்புகள் வரும் 15க்குள் அகற்ற இலக்கு

சென்னை, : 'சென்னை மற்றும் மூன்று புறநகர் மாவட்டங்களில் நீர்வழி தடங்களில் துார் வாரும் பணிகள் அனைத்தும், வரும் 15ம் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நீர்வழித்தடங்களை துார்வார அரசு ஒதுக்கிய நிதியை, நீர்வளத்துறை முறையாக பயன்படுத்தவில்லை. இதனால், பல்வேறு நீர்வழித்தடங்கள் புதர்கள், ஆகாயத்தாமரை மண்டி கிடக்கின்றன. இதில், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, டெங்கு பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் நேற்று வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, தலைமை செயலர் முருகானந்தம், துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரின் செயலர் உமாநாத் வாயிலாக, நீர்வளத்துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் பொதுப்பணி அலுவலகம் அனுப்பியுள்ள விளக்கம்:தமிழக அரசு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 167 பணிகளை மேற்கொள்ள பிப்., 6ல் நிர்வாக ஒப்புதல் அளித்தது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 138 பணிகளை மேற்கொள்ள 30.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. வேளச்சேரி, போரூர், புழல் ஏரிகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள், மிதக்கும் கழிவுகள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. புழல், மாதவரம், கொரட்டூர், அம்பத்துார், பட்டரவாக்கம், மணப்பாக்கம், டி.டி.பி., காலனி போன்ற வடிகால்களில் அடைப்பு ஏற்படுத்தியுள்ள திட்டுகள் அகற்றப்படுகின்றன. அடையாறு, கூவம், முட்டுக்காடு முகத்துவாரங்களில் படர்ந்துள்ள மணல் திட்டுக்கள் அகற்றும் பணிகளும் நடக்கின்றன. மத்திய பகிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் - அரும்பாக்கம் வடிகால்களை சீரமைக்க, கடந்த மாதம் 23ம் தேதி, 3.50 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 15ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை