உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பார்க்கிங் பகுதியான நடைபாதை மறைமலைநகரில் தீராத தலைவலி

பார்க்கிங் பகுதியான நடைபாதை மறைமலைநகரில் தீராத தலைவலி

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சி, 21 வார்டுகளைக் கொண்டது. மறைமலைநகர் நகர்ப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், நுாற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிக அளவில் உள்ளன.மறைமலைநகர் பஜார் வீதிகளில் நகராட்சி சார்பில், பாதசாரிகள் நடந்து செல்ல வசதியாக, 'பேவர் பிளாக்' நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. மறைமலைநகர் எம்.ஜி.ஆர்., சாலை வாகன போக்குவரத்து நிறைந்த சாலை. சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.இவர்கள், இந்த சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்வதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, வாகன ஓட்டிகளிடையே வீண் விவாதம் ஏற்பட்டு, கைகலப்பாகவும் மாறுகிறது. எனவே, இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:மறைமலைநகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிக்குச் செல்வோர், காலையில் இருசக்கர வாகனங்களை கொண்டு வந்து, சாலை ஓரங்களில் கண்டபடி நிறுத்தி விட்டு பேருந்து, மின்சார ரயில்கள் வாயிலாக பணிக்குச் செல்கின்றனர்.இரவு மீண்டும் வந்து வாகனங்களை எடுத்துச் செல்கின்றனர். இதன் காரணமாக, மற்ற வாகன ஓட்டிகள் 'பீக் ஹவர்'களில் கடும் அவதிப்படுகின்றனர். அடிக்கடி வாகன ஓட்டிகளிடையே சண்டையும் ஏற்படுகிறது.மேலும், இருசக்கர வாகனங்கள் திருடுபோவதும் தொடர்கதையாக உள்ளது.எனவே, சாலை ஓரங்களை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுத்து, போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, போக்குவரத்து போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !