மூதாட்டியிடம் செயின் பறித்த இருவர் கைது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன் மனைவி அஞ்சலை, 70. நேற்று முன்தினம் திருப்போரூர் செல்வதற்காக, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், அஞ்சலை கழுத்தில் அணிந்திருந்த 1.5 சவரன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பியோடினர். அஞ்சலை கூச்சலிட்டதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் இருவரையும் மடக்கி பிடித்து, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து, வழக்கு பதிந்த போலீசாரின் விசாரணையில், சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ரியாஸ்கான், 21, ஆவடியை சேர்ந்த தமிழரசன், 24, என்பது தெரிய வந்தது.இருவரும் புறநகர் பகுதிகளில் தனியாக செல்லும் முதியவர்களிடம் வழிப்பறி செய்து வந்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், 1.5 தங்க செயினை பறிமுதல் செய்தனர்.