செயல்படாத புதிய ரேஷன் கடை வெடாலில் 500 குடும்பம் தவிப்பு
செய்யூர்:செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டடம் பழுதடைந்தததால், கடந்த சில ஆண்டுகளாக, ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள இ - சேவை மைய கட்டடத்திற்கு நியாய விலைக்கடை மாற்றப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது.இதனால், நியாய விலைக்கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.இதையடுத்து, 2021 - 22ல், செய்யூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், 10 லட்சம் ரூபாயில், திரவுபதி அம்மன் கோவில் அருகே புதிய நியாய விலைக்கடை கட்டப்பட்டது.புதிய கட்டடம் கட்டி நான்கு மாதங்களான நிலையில், செயல்படுத்தப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளதால், அப்பகுதிவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, செயல்படாமல் உள்ள புதிய நியாய விலைக்கடை கட்டடத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.