4ம் தேதி கந்தசுவாமி கோவிலில் 90 திருமணம் செய்ய முன்பதிவு
திருப்போரூர், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வரும் 4ம் தேதி, 90 திருமணங்கள் செய்ய முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மாதந்தோறும் கிருத்திகை, சஷ்டி, விசாக நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து கந்த சுவாமியை வழிபடுகின்றனர். வேண்டுதல் காரணமாக சென்னை, காஞ்சி போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பலர், தங்கள் இல்ல திருமணங்களை இக்கோவிலில் நடத்துகின்றனர். அந்த வகையில், வரும் 4ம் தேதி சுபமுகூர்த்த நாள் என்பதால், அன்று ஒரே நாளில் கோவிலில் திருமணம் செய்ய, 90 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், கோவில் வெளிப்புற வளாகத்தில், முன்பதிவு செய்யாமல் பலரும் திருமணம் செய்ய வருவர் எனத் தெரிகிறது. மற்ற பகுதிகளில் உள்ள மண்டபங்களில் திருமணம் முடித்தவர்களும், சுவாமியை வழிபட வருவர். இதனால், முன்னேற்பாடு பணிகளை சம்பந்தப்பட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது. நெரிசல் பிரச்னைக்கு தீர்வு இதுகுறித்து, திருப்போரூர் பகுதி மக்கள் கூறியதாவது: முகூர்த்த நாட்களில் மட்டும், நான்கு மாட வீதிகளையும் ஒருவழிப் பாதையாக மாற்ற வேண்டும். கோவிலுக்கு, திருமணத்திற்கு மக்களை ஏற்றிவரும் வேன், கார் போன்ற வாகனங்கள், மக்களை இறக்கிவிட்டு மாடவீதிகளில் நிறுத்தாமல், 'பார்க்கிங்' இடத்திற்கு செல்ல வேண்டும். திருமணம் நடந்து முடிந்த பின், அந்த வாகனங்கள் மீண்டும் வந்து மக்களை ஏற்றிச் செல்ல வேண்டும். இதை ஒழுங்குபடுத்த ஆட்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு சரியான முறையில் நடந்தால், போக்குவரத்து பிரச்னை தீரும். இதற்காக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.