இளம்பெண் மாயம்: உறவினர்கள் மறியல்
சூணாம்பேடு, அக். 6-சூணாம்பேடு அடுத்த வில்லிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் சசிகலா 18. இவர், சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், மூன்று ஆண்டுகளாக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வரும் சசிகலா, நேற்று முன்தினம் காலை வழக்கம்போல கல்லுாரிக்கு சென்றார். மாலை வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதுகுறித்து, சூணாம்பேடு போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, வில்லிப்பாக்கம் கிராமத்தில் உள்ள மதுராந்தகம் - -வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில், காலை 8:30 மணிக்கு 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.காலை 10:00 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் டி.எஸ்.பி., மேகலா, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினார். மேலும், 'இளம்பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.