உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்-: கணிதா சம்பத் நம்பிக்கை

அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்-: கணிதா சம்பத் நம்பிக்கை

அச்சிறுபாக்கம்: மதுராந்தகம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொண்ட கணிதா சம்பத், ‘அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவேன்’ எனக் கூறி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் கணிதா சம்பத் நேற்று, அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் கே.பி.முனுசாமி, திருவண்ணாமலை மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய செயலர் விவேகானந்தன் ஆகியோருடன் பிரசாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர் கணிதா சம்பத் பேசியதாவது: கடந்த 2011 – 2016 வரை, எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்று, அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளேன். இரட்டை இலைக்கு மக்கள் அமோக ஆதரவளித்து வருகின்றனர்; மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தாத தற்குறி ஆட்சி நடந்து வருகிறது. தோல்வி பயத்தில், முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதிக்கு இரண்டு முறை பிரசாரம் மேற்கொள்ள வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். பின், மோகல்வாடி, சுனையம்பாறை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இதில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக, மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, மாலை 6:00 மணியளவில், அ.தி.மு.க., கொள்கை பரப்பு இணை செயலர் நடிகை விந்தியா, பெரும்பாக்கம் மற்றும் சரவம்பாக்கம் பகுதிகளில், வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து, தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !