கேளம்பாக்கம், நாவலுார் சார்-பதிவாளர் அலுவலகம் வீடியோ கான்பரன்ஸில் முதல்வர் ஸ்டாலின் திறப்பு
திருப்போரூர்:கேளம்பாக்கம், நாவலுாரில் புதிய சார் - பதிவாளர் அலுவலகத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சார் -- பதிவாளர் அலுவலகத்தில், ஆண்டுக்கு 25,000 பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. கோடிக்கணக்கில் பணம் புரளும் இந்த அலுவலகத்தில் கூட்ட நெரிசல், இட நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகின்றன. இதனால், திருப்போரூர் சார் -- பதிவாளர் அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற ஆய்வு செய்யப்பட்டது. இதற்கு, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது. காரணம், சட்டசபை தொகுதியின் தலைமையிடமாகவும், ஒன்றிய, வட்ட தலைமையிடமாகவும் திருப்போரூர் உள்ளது. இங்கு தாலுகா, ஒன்றிய அலுவலகம், கல்வித்துறை அலுவலகம், மின் வாரிய அலுவலகம் உள்ளிட்ட அனைத்து தலைமை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக வரும் பொதுமக்கள், ஒரே இடத்தில் தங்கள் வேலைகளை முடித்துச் செல்கின்றனர். திருப்போரூர் சார் -- பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்தால், அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால் இங்குள்ள வழக்கறிஞர்கள், ஆவண எழுத்தர்கள், பொதுமக்கள், அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பால், திருப்போரூர் சார் -- பதிவாளர் அலுவலகத்தை முழுமையாக இடமாற்றம் செய்வது கைவிடப்பட்டது. அதற்கு மாற்றாக, திருப்போரூர் சார்- பதிவாளர் அலுவலகத்தை திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலுார், வண்டலுார் ஆகிய நான்கு அலுவலகங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அந்தந்த பகுதிகளில் தற்காலிக இடங்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன. தற்போது முதற்கட்டமாக, கேளம்பாக்கத்தில் அன்னை சமுதாய நலக்கூடத்திலும், நாவலுாரில் அறிஞர் அண்ணா சமுதாய நலக்கூடத்திலும் சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக, மேற்கண்ட இரண்டு இடங்களில் உள்ள சார் -பதிவாளர் அலுவலகத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நாவலுாரில் நடந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், ஊராட்சி தலைவர் மகாலட்சுமி ஆகியோர், குத்துவிளக்கேற்றி துவக்கி, இனிப்பு வழங்கினர். அதேபோல், கேளம்பாக்கம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் ராணி தலைமை வகித்தார். திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், மாவட்ட சார் - பதிவாளர் புனிதா, கேளம்பாக்கம் சார் - பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கினர். விழாவில், தி.மு.க., திருப்போரூர் சட்டசபை தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன், வடக்கு ஒன்றிய துணைச் செயலர் ரமேஷ், வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.