அழுகிய நிலையில் தம்பதி உடல் மீட்பு
குரோம்பேட்டை:குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், சாய் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கணேஷ், 57. இவரது மனைவி மாலினி, 54. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.கடந்த சில தினங்களாக, கணேஷின் வீடு திறக்கப்படாமல் மூடியே இருந்தது. மேலும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.இது குறித்து, அப்பகுதியில் வசிப்போர் சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து பார்த்தபோது, கணேஷ் நாற்காலியில் அமர்ந்த நிலையில் இறந்து, உடல் அழுகிய நிலையிலும், மாலினி படுக்கை அறையில் விழுந்து, இறந்து கிடப்பதும் தெரிய வந்தது.இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நீரிழிவு நோய் மற்றும் ரத்த கொதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த கணேஷ் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்றும் விபத்து ஒன்றில் காலில் அடிபட்டு, நடக்க முடியாமல் இருந்த மாலினி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.கணேஷை அழைத்தும் அவர் வராததால், படுக்கையில் இருந்து மாலினி எழுந்து செல்லும்போது கீழே தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.