உயர்கோபுர மின்விளக்கு கம்பத்திற்கு மின் இணைப்பு ஏற்படுத்த கோரிக்கை
மதுராந்தகம், மதுராந்தகம் ஒன்றியம், சூரை ஊராட்சிக்குட்பட்டு, புழுதிவாக்கம் கூட்டு சாலை உள்ளது.மதுராந்தகத்தில் இருந்து புழுதிவாக்கம் கூட்டு சாலை, நெல்வாய், உத்திரமேரூர் வழியாக காஞ்சிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.அதில், புழுதிவாக்கம் கூட்டு சாலை, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மற்றும் திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் போன்ற பகுதிகளுக்கு இடையே உள்ள மிக முக்கிய சாலை சந்திப்பு பகுதியாகும்.அப்பகுதியில், காலை முதல் இரவு 10 மணி வரையிலும், மக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன.ஆனால், கூட்டு சாலை பகுதியில் போதிய வெளிச்சமின்மை மற்றும் மரங்கள் நிறைந்துள்ளதால், இருள் சூழ்ந்து காணப்பட்டன.அப்பகுதியில், உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.அதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தின் ஏற்பாட்டில், தனியார் பங்களிப்பில், புழுதிவாக்கம் கூட்டு சாலை பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி நடந்தது.தற்போது, மின் இணைப்பு ஏற்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் மின் இணைப்பு ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.