உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை அமைப்பதில் தொடரும் பிரச்னை வருவாய் துறை அளவீடு செய்ய கோரிக்கை

சாலை அமைப்பதில் தொடரும் பிரச்னை வருவாய் துறை அளவீடு செய்ய கோரிக்கை

அச்சிறுபாக்கம்:அகிலி கிராமத்தில், பிரச்னைக்குரிய சாலையை அளவீடு செய்து, ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அச்சிறுபாக்கம் ஒன்றியம், அகிலி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் இரண்டாவது குறுக்குத் தெருவில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி சாலை, கடந்த பல ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளது. சாலை அமைக்க கோரி, ஊராட்சி நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள், தொடர்ந்து மனு அளித்து வந்தனர். இதையேற்று, 2025 -- -26ல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமென்ட் கல் சாலை அமைக்க, 4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று மாதங்களுக்கு முன், சாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கின. அப்போது, தங்கள் இடத்திலும் சேர்த்து சாலை அமைக்கப்படுவதாக இருவீட்டார் தகராறு செய்தனர். இதனால், வருவாய்த் துறையினர் இடத்தை அளவீடு செய்து தர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அளவீடு செய்வது கிடப்பில் போடப்பட்டுள்ளது. அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சாலை அமைக்க ஒப்புதல் அளித்தும், வருவாய்த் துறையினர் இடத்தை அளவீடு செய்து ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்காததால், சாலை பணியும் கிடப்பில் உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, வருவாய்த் துறையினர் சாலையை அளவீடு செய்து, ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை