| ADDED : பிப் 13, 2024 10:52 PM
கடம்பத்துார்:வேலுார் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி நேற்று காலை 6:00 மணிக்கு புறநகர் மின்சார ரயில் புறப்பட்டது. காலை 8:30 மணியளவில் செஞ்சிபானம்பக்கம் - கடம்பத்துார் ரயில் நிலையம் இடையே வந்து கொண்டிருந்தது.அப்போது, ரயிலின் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வருவதாக, ரயில் பயணியர் தெரிவித்தனர். இதையடுத்து, ரயில் நிறுத்தப்பட்டு, ரயில் லோகோ பைலட் இறங்கி வந்து, புகை வந்த பகுதியை பார்வையிட்டார். தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், இன்ஜினை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், 30 நிமிடங்கள் தாமதமானது. இதனால் பயணியர் நடுவழியில் தவித்தனர்.தொடர்ந்து, திருவள்ளூர் நிலையம் வரை ரயிலை மெதுவாக இயக்கினர். பெரும்பாலான பயணியர், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கி, மற்ற ரயில்களில் ஏறி சென்றனர்.சென்னை கடற்கரை ரயில் நிலைய பணிமனைக்கு ரயிலை கொண்டு சென்று, சீரமைக்கப்பட்டு மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.