உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பள்ளி நேரத்தில் பறக்கும் மண் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்வதால் அச்சம்

பள்ளி நேரத்தில் பறக்கும் மண் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்வதால் அச்சம்

மறைமலைநகர்:செங்கல்பட்டு அருகே பாலுார் பகுதியில், பள்ளி நேரத்தில் டிப்பர் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, 13 கி.மீ., உடையது. இந்த சாலையை பாலுார், வில்லியம்பாக்கம், ரெட்டிபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கல் குவாரிகளில் இருந்து ஜல்லி கற்கள், எம் - சாண்ட் ஏற்றிச் செல்லும் நுாற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள், தினமும் இந்த சாலையில் சென்று வருகின்றன. கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டம், உள்ளாவூர் ஏரியில் இருந்து எடுக்கப்படும் மண், டிப்பர் லாரிகளில் இந்த சாலை வழியாக, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரிகள் தார்ப்பாய் மூடாமல் மண் ஏற்றிச் செல்வதால், விபத்து அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து பாலுார் கிராமத்தினர் கூறியதாவது: பாலுார் பள்ளி வளாகம் வழியாக காலை மற்றும் மாலை நேரங்களில், டிப்பர் லாரிகள் மண் ஏற்றிக் கொண்டு, தார்ப்பாய் மூடாமல் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால், குழந்தைகள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்லும் சூழல் உள்ளது. மேலும், இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே, பள்ளி குழந்தைகள் வந்து செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களில், மண் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும். அத்துடன், டிப்பர் லாரிகள் மண் ஏற்றிச் செல்லும் போது, தார்ப்பாய் மூடிச் செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை