உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புறநகரில் ஆபத்தான பேனர்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அச்சம்

புறநகரில் ஆபத்தான பேனர்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அச்சம்

மறைமலை நகர், மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, 30க்கும் மேற்பட்ட இடங்களில், ஆபத்தான வகையில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுதும், உரிய அனுமதியின்றி பேனர் மற்றும் விளம்பர பதாகைகள் வைக்க, உச்சநீதிமன்றம் மற்றும் நீதிமன்றம் தடை விதித்துள்ளன. இந்த தடையை மீறி, செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளில், நாளுக்கு நாள் பேனர் வைக்கும் கலாசாரம் பெருகி வருகிறது. குறிப்பாக சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், மகேந்திரா சிட்டி, பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சி, திருமண வாழ்த்து, கல்வி நிறுவனங்களின் பேனர் என, சாலையோரம் மற்றும் சாலையோரம் உள்ள கட்டடங்களின் மீது, பெரிய அளவில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பெரிய அளவிலான பேனர்கள், முறையான சாரங்கள் அமைக்காமல் வைக்கப்பட்டு உள்ளன. இதுபோன்று வைக்கப்படும் பேனர்களால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், மழைக்காலங்களில் பலத்த காற்று வீசும் போது, பேனர் இரும்பு சாரத்துடன் முறிந்து விழும் அபாயம் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று பேனர் வைக்க வேண்டும் என, நீதிமன்ற உத்தரவு இருந்தும், யாரும் அதை பின்பற்றுவதில்லை. பலர் தனி விளம்பரத்திற்கு பேனர்கள் வைத்து வரும் நிலையில், தற்போது சிங்கபெருமாள்கோவில் பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையோரம் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து, தனிநபர்கள் பேனர்கள் வைத்து, வருமானம் ஈட்டி வருகின்றனர். இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள், கண்டும் காணாமல் உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மறைமலைநகர் காவல் நி லைய எல்லைக்கு உட்பட்ட நெடுஞ்சாலை ஓரம் உள்ள கட்டடங்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில், ஆபத்தான வகையில் பேனர்கள் மற்றும் இரும்பு சாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பருவமழை துவங்க உள்ளதால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற அபாய பேனர்களை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை