மதுராந்தகம் ஏரியில் 300 கன அடி நீர் திறப்பு மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரியில் இருந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தானியங்கி ஷட்டர் வழியாக, 300 கன அடி நீர் வெளியே ற்றப்பட்டது. இதனால், கிளியாறு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் உள்ள ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 2,500 ஏக்கர் ஆகும். ஐந்து மதகுகள் வழியாக 4,000 ஏக்கர் விவசாய நிலங்களும், மேல்மட்ட கால்வாய் வழியாக, 30 ஏரிகளுக்கு நீர் கொண்டு சென்று, அதிலிருந்து 3,000 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 7,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மதுராந்தகம் ஏரியில், 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, துார்வாரி ஆழப்படுத்துதல், கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் ஏரியின் கலங்கல்களை கதவணையுடன் கூடிய உபரி நீர் போக்கி கட்டமைக்கும் பணிகள், கடந்த 2022ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்நிலையில், ஏரியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்காக கூடுதலாக, 43 கோடி ரூபாய், கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தமாக, 160 கோடி ரூபாய் செல வில், மதுராந்தகம் ஏரி சீரமைக்கப்பட்டு வருகிறது. வந்தவாசி மற்றும் உத்திரமேரூர் ஏரிகள் நிரம்பி, கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீர், கிளியாறு மற்றும் நெல்வாய் ஆறு ஆகியவற்றிலிருந்து வரும் நீர், மதுராந்தகம் ஏரிக்கு மிக முக்கிய நீர் ஆதாரமாகும். கடந்த மூன்று ஆண்டுகளாக, பணிகள் நடைபெற்று வந்ததால், ஏரிக்கு வரும் நீர் முழுதும் வெளியேற்றப்பட்டது. தற்போது, கலங்கல் அமைத்து, 12 தானியங்கி ஷட்டர்கள் அமைக்கும் பணி முடிந்தது. இதனால், நெல்வாய் மடுவு மற்றும் கிளியாற்றில் இருந்து வரும் தண்ணீர் ஏரியில் விவசாய பயன்பாட்டிற்காக, தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஏரியின் முழு கொள்ளளவு 25 அடியில், 23 அடி நீர் நிரம்பியுள்ளது. இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கீழ்பாலாறு வடிநில கோட்டத்தின் செயற்பொறியாளர் அறிவுறுத்தலின்படி நேற்று நெல்வாய் மடுவு மற்றும் கிளியாற்றின் வழியாக ஏரிக்கு வரும் 300 கன அடி தண்ணீரை, 3 தானியங்கி ஷட்டர்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மதுராந்தகம் ஏரியின் உபரி நீர் செல்லும் கிளியாற்றின் இடது கரை மற்றும் வலது கரையை ஒட்டி அமைந்துள்ள மதுராந்தகம், கடப்பேரி, விளாகம், முருக்கஞ்சேரி, முன்னுாத்திக்குப்பம், கத்தரிச்சேரி. உழுதமங்கலம், முள்ளி, வளர்பிறை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.