மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு தசரா விழாவில், இறுதி நாளான நேற்று, மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில், அம்மன் ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டில் தசரா விழா, கடந்த 23ம் தேதி துவங்கி சின்னக்கடை, பூக்கடை, ஜவுளிக்கடை, சின்னம்மன்கோவில், மேட்டுத்தெரு, ஓசூரம்மன்கோவில், அங்காளம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட பகுதிகளில், அம்மன் சுவாமிகள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர். தினமும், அம்மன் சுவாமிகளுக்கு பல்வேறு விதமாக மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 1ம் தேதி, சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். இறுதி நாளான நேற்று அதிகாலை 5:00 மணியளவில், மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். பின் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க வீதியுலா நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சுவாமி ஊர்வலம் வந்து, அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, சூரசம்ஹாரத்தின் போது வன்னி மரத்தில் அம்பு எய்து, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.