மயான கொள்ளை திருவிழா தேன்பாக்கத்தில் விமரிசை
சூணாம்பேடு:சூணாம்பேடு அருகே தேன்பாக்கம் கிராமத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில், மயான கொள்ளை திருவிழா விமரிசையாக நடக்கும்.இந்த ஆண்டு மயான கொள்ளை திருவிழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.பின், வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல், அம்மன் வீதியுலா நடந்தது.முக்கிய நிகழ்வாக, அம்மன் மயானம் புறப்பாடு நேற்று மாலை நடந்தது.அங்காளம்மன், பாவாடைராயன், காளி, காட்டேரி, சிவன் உள்ளிட்ட வேடங்களுடன், அம்மன் வீதியுலாவாக மயானம் நோக்கிச் சென்றார்.பின், மயானத்தில் 20 அடி நீளத்தில் பஞ்ச வர்ணம் பூசி வைக்கப்பட்டு இருந்த மகிஷாசூரன் சிலை வதம் செய்யப்பட்டது.மயானத்தில் படையலிட்டு பக்தர்கள் வழிபட்டனர். மயானத்தில் காய்கறிகள், பழங்கள், மலர்கள், நாணயங்களை சூறையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதில் தேன்பாக்கம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பின், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.