பிளஸ் - 2வில் முதல் 5 இடம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரசு, தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் - 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.தண்டலம் ஊராட்சி தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று, முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.கல்லுாரி கட்டணம் செலுத்த முடியாமல் பாதியில் நின்ற மாணவர் ஒருவருக்கு, 15,000 ரூபாய் நிதி அளிக்கப்பட்டது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு கல்வி உபகரணங்கள், புத்தகப் பை வழங்கப்பட்டன. மாணவி கவுரவிப்பு
தண்டலம் ஊராட்சி, எடையான்குப்பம் இருளர் பகுதியைச் சேர்ந்த ராமதுரை - கவிதா தம்பதியின் மகள் ஆனந்தி. இவர் திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் - 2 தேர்வில், 415 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.மேல் படிப்புக்கு, செங்கல்பட்டு அரசு கலைக் கல்லுாரியில், பி.ஏ., பொலிடிக்கல் சயின்ஸ் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பகுதியில் கல்லுாரி படிக்கும் முதல் மாணவியாக ஆனந்தி உள்ளதால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் இவருக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தனர்.