உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டு மனை பட்டா கோரிய 15,412 மனுக்கள் மீது...விசாரணை:தடையாணை தளர்வால் விண்ணப்பித்தோர் நிம்மதி

வீட்டு மனை பட்டா கோரிய 15,412 மனுக்கள் மீது...விசாரணை:தடையாணை தளர்வால் விண்ணப்பித்தோர் நிம்மதி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஐந்து தாலுகாக்களில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த, 15,412 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்து, தகுதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்து உள்ளார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. இப்பகுதிகளில், ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு இடங்களில், ஆயிரக்கணக்கானோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்வு கூட்டம், மனுநீதி நாள் முகாம்களில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மனு அளித்து வந்தனர்.

தடை

இம்மனுக்கள் மீது விசாரணை செய்து, கள ஆய்வு நடத்தி, வருவாய்த் துறையினர் பட்டா வழங்கி வருகின்றனர். இதற்கிடையில், சென்னையிலிருந்து 32 கி.மீ., துாரத்திற்கு, 'பெல்ட் ஏரியா'வாக, தடை செய்யப்பட்ட பகுதியாக, 1962ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது.இந்த 'பெல்ட் ஏரியா'வில், செங்கல்பட்டு தாலுகாவில் காட்டாங்கொளத்துார், கண்டிகை, தைலாவரம், வல்லாஞ்சேரி, பொத்தேரி, காயரம்பேடு உள்ளிட்ட 15 கிராமங்கள் உள்ளன.திருப்போரூர் தாலுகாவில் திருப்போரூர், நெல்லிக்குப்பம், கேளம்பாக்கம், படூர், நாவலுார், கோவளம், மூட்டுக்காடு தையாவூர் உள்ளிட்ட 29 கிராமங்கள் உள்ளன.வண்டலுார் தாலுகாவில் மண்ணிவாக்கம், வண்டலுார், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், நெடுங்குன்றம், ஊனமஞ்சேரி, கொளப்பாக்கம், நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், வேங்கடமங்கலம், நந்திவரம், கூடுவாஞ்சேரி, காரணை புதுச்சேரி, பெருமாட்டுநல்லுார், தாழம்பூர், மாம்பாக்கம், புதுப்பாக்கம் உள்ளிட்ட 36 கிராமங்கள் உள்ளன.தாம்பரம் தாலுகாவில் பெருங்களத்துார், முடிச்சூர், மாடம்பாக்கம், அகரம்தென், அஸ்தினாபுரம், மதுரப்பாக்கம், செம்பாக்கம், சிட்லபாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், நன்மங்கலம் உள்ளிட்ட 20 கிராமங்கள் உள்ளன.

உத்தரவு

பல்லாவரம் தாலுகாவில் ஜமீன் பல்லாவரம், திரிசூலம், கவுல்பஜார், மூவரசம்பட்டு, பம்மல், பொழிச்சலுார், அனகாபுத்துார், திருநீர்மலை ஆகிய கிராமங்களில், ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு, பட்டா வழங்க முடியாத சூழல் இருந்தது. தற்போது செங்கல்பட்டு, திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் தாலுகாக்களில், 'பெல்ட் ஏரியா' பகுதி தடையை நீக்கி, இலவச வீட்டுமனை பட்டா வழங்க, அரசு கடந்த மார்ச் 3ம் தேதி உத்தரவிட்டது.இந்த உத்தரவில், சென்னை மற்றும் அதன் சூழ்பகுதிகளில் பட்டா வழங்க ஏற்படுத்தப்பட்ட தடையாணையை தளர்வு செய்து, சிறப்பு வரன்முறைப்படுத்துதல் திட்டம் வாயிலாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிடப்பட்டது.மேலும் மாவட்ட தலைநகரம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இருந்து, 8 கி.மீ., முதல் 16 கி.மீ., துாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகள் முதல், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்போரின் குடியிருப்புகளை வரன்முறைப்படுத்தி, இலவச வீட்டுமனை பட்டா வழங்க, அரசு உத்தரவிட்டது.

தாலுகாக்கள்

இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் செங்கல்பட்டு, வண்டலுார், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களில், மாநகர சூழ்பகுதிகளில், 12,127 வீட்டுமனை மனுக்கள், நகர் பகுதிகளில், 3,285 மனுக்கள் என, மொத்தம் 15,412 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், இலவச வீட்டுமனை பட்டாக்கள் குறித்து ஆய்வு செய்ததில், ஐந்து தாலுகாக்களில், 1,500 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. மற்ற மனுக்கள் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்து தகுதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படும் எனவும், கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

டிச., 31 வரை இருக்கும்

செங்கல்பட்டு, திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களில், இலவச வீட்டுமனை 0.3 சென்ட் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 5 கோடி ரூபாய் இருந்தால், மாவட்ட அளவிலான குழுவில் பட்டா வழங்கப்படும்.இலவச வீட்டுமனை பட்டாவின் வழிகாட்டி மதிப்பு, 5 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால், மாநில அளவிலான குழுவிற்கு, மாவட்ட குழுவால் பரிந்துரை செய்யப்படும்.இலவச பட்டா பெற ஆதார் அட்டை, பொது விநியோக திட்டத்திற்கான ஸ்மார்ட் கார்டு, மின் கட்டண ரசீது, எரிவாயு இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு வரி, சொத்து வரி ரசீது இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாநகர் சூழ் பகுதிகளில், 10 ஆண்டுகள் வீடு கட்டி வசித்து வரவேண்டும். நகர பகுதியில், ஐந்து ஆண்டுகள் வீடு கட்டி வசித்து வர வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு, பட்டா வழங்க தகுதியுடையவர்கள். இத்திட்டம், வரும் டிச., 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !