செங்கல்பட்டு: சென்னை --- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து, தென்மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சென்று வருகின்றன.இச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூல் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், செங்கல்பட்டு அடுத்த பரனுார், அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் ஆகிய பகுதிகளில், தலா ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளன.இதன் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்கின்றனர். இதனை வசூலிக்கும் ஆணையம், சாலையை பராமரிக்கவும், வாகன ஓட்டிகளுக்கான அடிப்படை வசதிகளை அமைக்கவும் கோரிக்கை எழுந்தது.கூடுவாஞ்சேரி --- செட்டிப்புண்ணியம் வரை, எட்டு வழிச்சாலையாக மாற்றி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் புதிதாக சாலை அமைத்தனர். கடந்த ஆண்டு, மிக்ஜாம் புயலால் கனமழை பெய்தபோது, சாலையில் மழைநீர் தேங்கியது.இதனால், ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன. கூடுவாஞ்சேரி- -- மாமண்டூர் வரை, 22 கி.மீ., துாரம் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகின.இச்சாலையில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, அப்போதைய கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார். இந்த உத்தரவை, ஆணைய அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.இதுமட்டும் இன்றி, சாலையில் விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகின்றன.இச்சாலை வழியாக, மத்திய, மாநில அரசுத்துறை அதிகாரிகள் சென்று வருகின்றனர். இருப்பினும், சீரழிந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.எனவே, வாகன ஓட்டிகளின் நலன்கருதி, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கவும், மின்விளக்கு வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் ஆணையம், சாலையை முறையாக பராமரிக்க வேண்டும். சாலையை பராமரிப்பதில் அலட்சியமாக உள்ளனர். சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். வாகன ஓட்டிகள் மற்றும் மக்களைப் பற்றி கவலை இல்லாமல் உள்ளனர். சாலையை சீரமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.தணிகாசலம்,சமூக ஆர்வலர், செங்கல்பட்டு.தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பணிகள் துவங்கப்படும். சீரமைப்பு பணிகளை முடித்து, மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.- தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள்,சென்னை.