நெடுஞ்சாலையில் கிழிந்து தொங்கும் பேனர்களால் வாகன ஓட்டிகள் அச்சம்
மறைமலை நகர், செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், பொத்தேரி, காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நெடுஞ்சாலையோரம் மற்றும் அதை ஒட்டியுள்ள கட்டடங்கள் மீது, ராட்சத பேனர்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக செங்கல்பட்டு -- திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலை, சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலை, ஜி.எஸ்.டி., சாலைகளில் சினிமா, ரியல் எஸ்டேட், அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அதிகமாக வைக்கப்பட்டுள்ளன.இந்த பேனர்கள் காற்றில் அசைந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையிலும், கவனச்சிதறல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன.இதுபோன்ற பேனர்களை, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் லேசான மழை பெய்த போது பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலை ஓரம் வைக்கப்பட்டு இருந்த ராட்சத விளம்பர பேனர்கள் கிழிந்து, கீழே இருந்த மின் கம்பிகளில் சிக்கி மின் தடை ஏற்பட்டது.இதுபோன்ற சம்பவங்களால் வாகன ஓட்டிகளிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது.இருப்பினும், பேனர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், அனைத்து பேனர்களையும் அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.