ஆப்பூரில் குறுகிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
மறைமலை நகர்:மறைமலை நகர் - ஆப்பூர் சாலை 7 கி. மீ., தூரம் உடையது. இந்த சாலையை சட்டமங்கலம், பனங்கொட்டூர், திருக்கச்சூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை சிங்கபெருமாள் கோவில்- -- ஸ்ரீ பெரும்புதுார் சாலையின் இணைப்பு சாலை. இந்த சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் தனியார் தொழிற்சாலை பேருந்துகள் சென்று வருகின்றன.மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரகடம் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில் ஆப்பூர் -- தாளிமங்கலம் இடையே வனப்பகுதியில் 200 மீட்டர் சாலை மிகவும் குறுகலான உள்ளது. இதன் காரணமாக, காலை மற்றும் மாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் அவசர காலங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சாலையின் இந்த பகுதியை அகலப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.