கந்தசுவாமி கோவிலில் முகூர்த்த நாள் கூட்டம்
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், விசேஷ நாட்களில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், முகூர்த்த நாளான நேற்று, கந்தசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பக்தர்கள், சரவண பொய்கை குளத்தில் நீராடி, கந்தசுவாமியை வழிபட்டனர். மொட்டை அடித்தல், காது குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். அதேபோல் நேற்று, கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. மேலும், திருப்போரூர் உள்ளிட்ட மற்ற பகுதிகளில் திருமணம் முடித்தவர்களும், கந்தசுவாமி கோவிலுக்கு வந்து, சுவாமியை தரிசித்துச் சென்றனர்.