உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய கட்டடத்திற்கு தாவியது ஓட்டேரி காவல் நிலையம்: வீடியோ கான்பரன்ஸ்சில் முதல்வர் திறந்தார்

புதிய கட்டடத்திற்கு தாவியது ஓட்டேரி காவல் நிலையம்: வீடியோ கான்பரன்ஸ்சில் முதல்வர் திறந்தார்

வண்டலுார்:வண்டலுார்,- ஓட்டேரி காவல் நிலையம், நேற்று முதல் புதிய கட்டடத்தில் செயல்படத் துவங்கியது. காவல் நிலைய புதிய கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக திறந்து வைத்தார். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட வண்டலுார், ஓட்டேரி காவல் நிலையம் மண்ணிவாக்கம் - வாலாஜாபாத் சாலையில், தமிழக அரசால் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. இந்த கட்டடத்தில் உரிய இட வசதியும், வெளிச்சமும் இல்லாததால், காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, 2020ல் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மண்ணிவாக்கம் -- வாலாஜாபாத் சாலை மற்றும் வெளிவட்ட சாலை இணையும் இடத்தில், சர்வே எண் 277ல், இரண்டு தளங்களுடன், 4,000 சதுர அடி பரப்பில், 2.15 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன், புதிய கட்டடம் கட்ட, 2023ல் திட்டம் வகுக்கப்பட்டது. பின், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தால், 2024ல் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டு, கடந்த மாதம் அனைத்து பணிகளும் நிறைவடைந்தன. இதையடுத்து, ஓட்டேரி காவல் நிலையத்தின் புதிய கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நேற்று காலை 11:00 மணியளவில் திறந்து வைத்தார். செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலெட்சுமி காவல் நிலைய புதிய கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகர காவல் உயரதிகாரிகள் பங்கேற்றனர். இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த விசாலமான 'பார்க்கிங்' வசதியுடன், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும்படி, சாய்வு தளங்களுடன் காவல் நிலைய புதிய கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: புதிய கட்டடத்தில் சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு ஆகிய இரு காவல் பிரிவுகள் மட்டுமே செயல்பட உள்ளன. போக்குவரத்து பிரிவு, பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் இயங்கி வருகிறது. எனவே, போக்குவரத்து பிரிவையும் இதே கட்டடத்தில் இயங்கும்படி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ