ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேங்கும் கழிவுநீரால் பயணியர் அவதி
மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்குவதால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை மார்க்கத்தில், சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை திருக்கச்சூர், கொண்டமங்கலம், கொளத்துார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர் அதிக அளவில், இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரயில் நிலையம் செல்லும் சாலையின் நடுவே கழிவுநீர் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இந்த வழியாகச் செல்லும் பயணியர் சிரமப்படுகின்றனர்.எனவே, ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றி, மீண்டும் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.