வண்டி பாதை பிரச்னையில் கோர்ட் உத்தரவை நடைமுறைபடுத்த கோரி மக்கள் போராட்டம்
செய்யூர்:கெங்கதேவன்குப்பத்தில், வண்டிப் பாதையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டி, கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டோர், நேற்று வி.ஏ.ஓ., அலுவலகம் முன் உண்ணாவிரதத்தில் ஈடு பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறியதாவது: இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கெங்கதேவன்குப்பம், புல எண் 95/4ல் உள்ள 2.50 ஏக்கர் புன்செய் நிலத்தை, 1971ம் ஆண்டு, ஆறுமுகம் என்பவரிடம் இருந்து, சண்முகம் என்பவர் கிரயம் பெற்று, வண்டிகள் செல்ல வழி உரிமையுடன் பயன்படுத்தி வந்தோம். கடந்த 2010ம் ஆண்டு, ஆறுமுகத்தின் மகன் முருகரத்தினவேலிடம் இருந்து, வண்டிப் பாதையுடன் தணிகாசலம் மற்றும் மாரிமுத்து ஆகியோர் கிரயம் பெற்றனர். பின், கிராமத்தினர் வண்டிப் பாதையை பயன்படுத்த தணிகாசலம் மற்றும் மாரிமுத்து தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து 2019ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 2021ம் ஆண்டு செய்யூர் நீதிமன்றம், வண்டிப்பாதையை பயன்படுத்திக் கொள்ள இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டி, கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 9:00 மணியளவில், கிராம நிர்வாக அலுவலகம் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு நடத்தி, அடுத்த வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, கிராமத்தினர் கலைந்து சென்றனர்.