பாலுார் - கண்டிகை சாலையில் பள்ளங்களால் விபத்து அபாயம்
மறைமலை நகர்:பாலுார் - கண்டிகை சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால், விபத்து அபாயம் நிலவுகிறது.பாலுார் -- கண்டிகை சாலை, 10 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையைப் பயன்படுத்தி, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் ஒரகடம், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.மேலும், இந்த பகுதியில் உள்ள கல் குவாரியில் இருந்து 'எம்.சாண்ட்' மணல், ஜல்லி கற்கள் ஏற்றிச்செல்லும் நுாற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், தினமும் இந்த சாலையில் சென்று வருகின்றன. ரெட்டிபாளையம், கரும்பாக்கம் கிராமங்களில் உள்ள செங்கல் சூளையில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளும், அதிக அளவில் இச்சாலையில் சென்று வருகின்றன.இந்த சாலை சேதமடைந்து, பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலையில், பாலுார் கிராம நிர்வாக அலுவலகம் எதிரில், பல ஆண்டுகளாக பெரிய அளவிலான மரண பள்ளங்கள் உள்ளன.நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதை முழுமையாக சரி செய்யாமல், வெறும் ஜல்லி கற்களை மட்டும் பள்ளத்தில் கொட்டி வருகின்றனர். அதில் கனரக வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து, சக வாகன ஓட்டிகள் மற்றும் கிராமத்தினர் அவதியடைந்து வருகின்றனர்.பெரும் விபத்து ஏற்படும் முன், இந்த பள்ளங்களை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.