கழிவுநீரை முறையாக வெளியேற்றாமல் தனியார் அபார்ட்மென்ட் அடாவடி
கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் பிரதான சாலையில், தனியாருக்கு சொந்தமான லாங்கர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 1,200க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக வெளியேற வசதி செய்யப்படாததால், அங்குள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிகிறது. இந்த கழிவுநீர், அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் மட்டுமின்றி, அருகிலுள்ள தெருக்களுக்கும் பரவுகிறது. இதனால், தொற்று நோய் பீதியில் பொதுமக்கள் தவிக்கின்றனர்.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இப்பகுதியில் உள்ள லாங்கர் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகமான வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பின் கழிவுநீரை, தனியார் கழிவுநீர் வாகனம் வாயிலாக வெளியேற்றி வந்தனர்.தற்போது இங்கு அதிகமானோர் வசிப்பதால், கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிவதால், அதை முறையாக வெளியேற்றாமல் விடுகின்றனர். இந்த கழிவுநீரால் கொசுத்தொல்லை அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், அவர்கள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, இந்த தனியார் குடியிருப்பு அருகில் வசிப்போர் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த குடியிருப்பு வளாகத்தை ஆய்வு செய்து, கழிவுநீரை முறையாக வெளியேற்ற அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.