மானாமதி - தாம்பரம் இடையே மாநகர பேருந்து விட கோரிக்கை
திருப்போரூர், மானாமதி - தாம்பரத்திற்கு நேரடி மாநகர பேருந்து சேவை துவங்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில், 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மானாமதி சுற்றி 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி அருகே குன்னப்பட்டில், ஜப்பான் சிட்டி தொழில் நகரம் உள்ளது. மானாமதி உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள், மாணவ - மாணவியர் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக கேளம்பாக்கம், புதுப்பாக்கம், மாம்பாக்கம் வழியாக தாம்பரம் செல்கின்றனர். தற்போது தாம்பரத்தில் இருந்து திருப்போரூர் வரை 'தடம் எண் 515பி' மாநகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. மானாமதி மற்றும் சுற்றுவட்டார பகுதியினர் திருப்போரூருக்கு சென்று, அங்கிருந்து தாம்பரம் பேருந்தில் செல்கின்றனர். எனவே, மானாமதியில் இருந்து ஆமூர், சிறுதாவூர், திருப்போரூர், கேளம்பாக்கம், புதுப்பாக்கம், மாம்பாக்கம், வண்டலுார் வழியாக, தாம்பரம் வரை செல்லும் வகையில் புதிய மாநகர பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என, இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவரை தாம்பரத்தில் இருந்து திருப்போரூர் வரை வரும் பேருந்தை, மானாமதி வரை நீடிக்க வேண்டும் என, பகுதி மக்கள் மற்றும் மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.