செக்கடித்தாங்கல் ஏரியை துார் வாரி சீரமைக்க கோரிக்கை
திருப்போரூர், திருப்போரூர், செக்கடித்தாங்கல் ஏரியை, துார் வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி, நெம்மேலி செல்லும் சாலையை ஒட்டி, செக்கடித்தாங்கல் ஏரி உள்ளது.இதில், இரண்டு பிரதான மதகுகள் மற்றும் மூன்று நீர்ப்பாசன கால்வாய்கள் உள்ளன. இந்த ஏரி நீர் வாயிலாக, 200 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது இந்த ஏரியில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன.ஏரியின் மேற்குப்புறத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், ஏரியின் அளவு சுருங்கி உள்ளது.மேலும், ஏரியை ஒட்டியுள்ள வீடுகளின் கழிவுநீர், கிழக்கு மாடவீதிகளில் உள்ள வடிகால்வாய் வழியாக, ஏரியில் விடப்படுகிறது.இதனால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது.எனவே, நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அத்துடன், ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, துார் வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.