உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிளியாற்றின் கரையில் குப்பை குவிப்பதை தடுக்க கோரிக்கை

கிளியாற்றின் கரையில் குப்பை குவிப்பதை தடுக்க கோரிக்கை

மதுராந்தகம்:மதுராந்தகம் கிளியாற்றின் கரையில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம், கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி கடைகள் மற்றும் உணவகங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த கோழி இறைச்சி கடைகள் மற்றும் உணவகங்களின் கழிவுகள் இரவு நேரத்தில், கிளியாற்று பாலத்தில் இருந்து எரிவாயு தகன மேடை பகுதிக்கு செல்லும் சாலையோரம் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும், மதுராந்தகம் ஏரியிலிருந்து கலங்கல் வழியாக உபரி நீர் செல்லும், கிளியாற்றின் கரையிலும் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த கழிவுகளை உண்ண, அப்பகுதியில் அதிக அளவில் நாய்கள் குவிகின்றன. அப்போது அவை சண்டையிட்டு சாலையில் ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இதுமட்டுமின்றி, மர்ம நபர்கள் இந்த கழிவுகளை எரிப்பதால், சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புகை பரவி, வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். கடைகளில் சேகரமாகும் கழிவுகளை, பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் சென்று சேகரிக்கின்றனர். ஆனாலும், ஒரு சில கடைக்காரர்கள், இதுபோன்று திறந்தவெளியில் கழிவுகளை கொட்டி வருகின்றனர். எனவே, சாலையோரம் கோழி இறைச்சி கழிவு மற்றும் உணவு கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !