வாலிபரை வெட்டிய இருவருக்கு காப்பு
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், வாலிபரை வெட்டிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு நகராட்சி, மசூதி தெருவைச் சேர்ந்தவர் துளசிதாஸ், 28; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் மாலை, தன் பாட்டி ஜெயலட்சுமி செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் வைத்துள்ள பூக்கடையில் அமர்ந்திருந்தார்.அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள், துளசிதாஸை கத்தியால் தலையில் வெட்டி விட்டு, தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது ஜெயலட்சுமி மற்றும் அங்கிருந்த பயணியர் அவர்களை மடக்கிப் பிடித்து, செங்கல்பட்டு நகர காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.துளசிதாஸை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விசாரணையில் இருவரும், செங்கல்பட்டு அடுத்த திருமணம் பகுதியைச் சேர்ந்த ஜோனர்த்தன்,18, அவரது நண்பரான, 17 வயது சிறுவன் என தெரிந்தது.ஜோனர்த்தன் கடந்த சில நாட்களுக்கு முன், புதிய பேருந்து நிலையத்தில் தன் காதலியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, துளசிதாஸ் அடித்துள்ளார். அதனால் அவரை வெட்டியது தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.